கப்பளா பாத்தாஸ், ஏப். 21- எதிர்வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வீட்டிலிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) நடைமுறையைச் செயல்படுத்த கல்வி அமைச்சு தயாராக உள்ளது.
அக்காலகட்டத்தில் ஆசியான் மாநாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் ஏதுவாக சம்பந்தப்பட்ட பள்ளிகளை அடையாளம் காணும் பணியில் தனது அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபாட்லினா சீடேக் தெரிவித்தார்.
இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த அணுகுமுறையைச் செயல்படுத்த நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். மேலும் அதன் வெற்றியை உறுதி செய்வதில் உறுதியாகவும் இருக்கிறோம். இந்த விஷயம் ஏற்கனவே கல்வியமைச்சு நிலையில் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
டத்தோ ஹாஜி அகமது படாவி தேசியப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஜாலூர் ஜெமிலாங் சின்னம் அணியும் அடையாள விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
அடுத்த மாதம் (மே) நடைபெறும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் பி.டி.பி.ஆர். திட்டத்தை அமல் செய்வதற்கான சாத்தியத்தை செயல்படுத்துவதற்கு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் செய்த பரிந்துரை தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் மேற்கொண்ட மலேசிய பயணத்தின் போது பல சாலைகள் மூடப்பட்டதால் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள பொதுமக்கள் சந்தித்த சவால்கள் மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் உருவானதாக முகமது கூறியிருந்தார்.


