கப்லா பதாஸ், ஏப்ரல் 21 - கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்காத கல்வி நிறுவனங்கள், மாணவர் சீருடையில் ஜாலோர் கெமிலாங் சின்னத்தை அணியும் முயற்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களையும் இந்த திட்டம் சென்றடைவதும், அனைத்துத் துறைகளின் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்வதும் இதன் நோக்கம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.
“இன்று முதல், மலேசியா முழுவதும், கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தம் 5.3 மில்லியன் மாணவர்கள் தங்கள் பள்ளி சீருடையில் ஜாலோர் கெமிலாங் சின்னத்தை அணியத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
“எனவே, கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்காத கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதன் மூலம், ஊக்குவிக்கப்படும் தேசபக்தி உணர்வு அனைத்து மாணவர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமைச்சகம் முன்னதாக அதன் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சீருடையில் ஜாலோர் கெமிலாங் சின்னத்தை படிப்படியாக செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருவரிடமும் ஆழமான தேசபக்தி உணர்வை ஏற்படுத்த அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் மலேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் ஆகியவை இந்த திட்டத்தில் ஈடுபடும்.
இருப்பினும், சின்னத்தை அணியாத மாணவர்கள் எந்த தண்டனையையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்று ஃபட்லினா கூறினார். ஏனெனில், இந்த திட்டம் தண்டனைக்குரியதாக இருக்கக்கூடாது, மாறாக நாட்டின் மீது அன்பை வளர்க்கும் வகையில் இருக்கு வேண்டும்.


