ஷா ஆலம், ஏப். 21- தாமான் ஸ்ரீ மூடா மற்றும் தாமான் ஸ்ரீ அண்டாலாசில்
நிலவும் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை
ஆராய்வதற்காக ஊராட்சி மன்றங்கள் மற்றும் வடிகால் மற்றும்
நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) உள்ளிட்ட அரசு நிறுவனங்களை
உள்ளடக்கிய அவசரக் கூட்டத்தை இன்று நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள்து.
அதே சமயம் இன்னும் விரைவுபடுத்தப்படாமலிருக்கும் ஊராட்சி மன்ற,
மாநில மற்றும் மத்திய அரசின் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்பான
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வு காணும்படி அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம்
பணிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
வெள்ளப் பிரச்சனைக்கு விரிவானத் தீர்வு காணப்படுவதையும்
விரும்பத்தகாத சம்பவங்கள் முறையாகக் கையாளப்படுவதையும் உறுதி
செய்யும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
கடந்த வாரம் பெய்த அதிகப்படியான மழையின் காரணமாக திடீர்
வெள்ளம் ஏற்பட்டதை நானே நேரில் கண்டேன். இந்த வெள்ளப் பேரிடர்
மக்களுக்கு குறிப்பாக அவ்விரு பகுதிகளையும் சேர்ந்தவர்களுக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் அமலாக்கம் மந்தமாக இருக்கும்
காரணத்தால் வெள்ளப் பிரச்சனை அடிக்கடி ஏற்படுவது குறித்து பொது
மக்களில் பலர் எனது அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களின்
ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான முதல் முயற்சியாக எனது
அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி ஷா ஆலம் மாநகர் மன்றம்,
கிள்ளான் அரச மாநகர் மன்றம் மற்றும் ஜே.பி.எஸ். ஆகிய தரப்பினரை
உள்ளடக்கிய சிறப்பு ஒருங்கிணைப்பு கூட்டத்தை இன்று நடத்துவதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமிருடின் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
மத்திய அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் நீண்ட
கால வெள்ளத் தடுப்புத் திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படுவது
அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


