ஷா ஆலம், ஏப். 21 - நிலநடுக்கம் உள்ளிட்ட எதிர்கால பேரிடர்களை எதிர்கொள்வதற்கான நடைமுறைகளை மாநில அரசு வரைந்து வருகிறது.
பயிற்சிக்காக அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் எதிர்வரும் ஜூன் மாதவாக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த தனது அலுவலகம் திட்டமிட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
இதற்கு முன்னர் நாங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற தொடர்ச்சியான பேரிடர்களை கையாள்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வந்தோம். ஆனால், திடீரென சமீபத்தில் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அதோடு மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் மியான்மரைத் தாக்கிய பூகம்பங்களிலிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். முன்பு பூகம்ப அபாயம் இல்லாத நாடுகள் கூட இப்போது டெக்டோனிக் தட்டுகளின் இயக்க மாற்றங்களால் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
குறைந்த பட்சம் ஜூன் மாதத்திற்குள் பேரிடருக்குப் பிந்தைய மேலாண்மையில் அனுபவம் உள்ள நாடுகளுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் பயிற்சிக்காக அனுப்பப்படுவார்கள் என்று அவர் தனது நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் போது கூறினார்.
இதனிடையே, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் துப்புரவுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நஜ்வான் மேலும் கூறினார்.


