புத்ராஜெயா, ஏப்ரல் 21 - அமெரிக்காவில் தங்கியிருக்கும் அல்லது அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லும் மலேசியர்களுக்கு, விசா நிபந்தனையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை.
அதாவது அவர்களுக்குப் பாதிப்பைக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு, குடிநுழைவுக் கொள்கையிலும் மாற்றம் ஏதும் நடக்கவில்லை என வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா தெளிவுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களின் விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானாலும், அது மலேசியாவைப் பாதிக்கவில்லை என அமைச்சு கூறியது. இருப்பினும், நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்.
ஒருவேளை மலேசியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் நிகழ்ந்தால், அது முறைப்படி தெரிவிக்கப்படும்.
அதே சமயம், அமெரிக்காவில் தங்கியுள்ள அல்லது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மலேசியர்களும், அந்நாட்டு குடிநுழைவு மற்றும் விசா கொள்கைகள் குறித்த நிலவரங்களைக் கண்காணித்து வர வேண்டும் என விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டது.
ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் அமெரிக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


