ஷா ஆலம், ஏப்ரல் 21 - பந்திங் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஓர் உணவகத்தில் கத்தியேந்திய ஆடவர் ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் பாதுகாவலரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட அந்த பாதுகாவலர் நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள பந்திங் மருத்துவமனையில் பணியில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கோல லங்காட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது அக்மல்ரிசல் ரட்ஸி தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பாதுகாவலரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. மாறாக, சம்பவம் தொடர்பான தகவல்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர் என அவர் சொன்னார்.
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை நடந்த சம்பவத்தில் அந்த ஆடவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுடப்பட்டதன் விளைவாக இக்காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 307வது பிரிவு மற்றும் 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 37 மற்றும் 39வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
மூர்க்கமடைந்த நிலையில் கையில் கத்தியுடன் மருத்துவப் பணியாளர்களை அச்சுறுத்தும் ஆடவர் ஒருவரை நோக்கி பாதுகாவலர் துப்பாக்கியால் சுடுவதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


