ஜார்ஜ் டவுன், ஏப். 20- பாயான் லெப்பாஸில் போதைப்பொருள் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய இரண்டு நபர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு பெற்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவுவதற்காக மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்களை ஆறு நாட்களுக்கு காவலில் வைக்க இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) செய்த விண்ணப்பத்தின் பேரில் 20 மற்றும் 30 வயதுடைய அந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் சித்தி நூருல் சுஹைலா பஹாரின் பிறப்பித்தார்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பாயான் லெப்பாஸில் உள்ள அடுக்குமாடி பகுதியில் வசிப்பவர்களால் பிடிக்கப்பட்ட இரு நபர்களிடமிருந்து சுமார்1,500 வெள்ளியை அவ்விரு போலீஸ்காரர்களும் லஞ்சமாகக் கேட்டதாக நம்பப்படுகிறது.
விசாரணைக்காக போலீஸ் நிலையண்திற்கு அழைத்து வரப்பட்டபோது சந்தேக நபர்களில் ஒருவர் தங்கள் நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு பிரதியுபகாரமாக கைதான இருவரிடமிருந்தும்1,500 கேட்டுள்ளார்.
அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீஸ்காரரின் கணக்கிற்கு இ- வாலட் மூலம் 200 வெள்ளியை மாற்றியுள்ளார். மீதமுள்ள 1,300 வெள்ளியைச் செலுத்தும் வரை தங்கள் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை பிணையாக விட்டுவிடுமாறு அவர் கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஆடவர் பினாங்கு எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக இரு காவல் துறை உறுப்பினர்களையும் அதிகாரிகள் நேற்றிரவு சுமார் 7.30 மற்றும் 9.00 மணிக்கு இடையே கைது செய்தனர்.


