ஈப்போ, ஏப். 20- கம்போங் திசோங் பாலம் இடிந்து விழுந்ததில் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 81 மாணவர்கள் உட்பட மொத்தம் 136 பேர் வெளியேற முடியாத நிலையில் சிக்கிக் கொண்டனர்.
இதன் காரணமாக பெல்டா சுங்கை கிளா ஹாட் ஸ்பிரிங், கம்போங் திசோங் சுங்காய் மற்றும் பூயோங் மாஸ் சரணாலய முகாம் தளத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு காலை 10.46 மணிக்குப் புகார் கிடைக்கப் பெற்றதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெஹ்ராங்கில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 81 மாணவர்களும், பூயோங் மாஸ் சரணாலய முகாம் தளத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்களும் அடங்குவர். மேலும் 17 குடும்பங்களைச் சேர்ந்த 39 பெரியவர்கள் மற்றும் 16 சிறார்கள் உள்பட 45 பேர் ஹாட் ஸ்பிரிங் சுங்கை கிளாவில் சிக்கித் தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் மாற்று வழிகளைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வர தீயணைப்புத் துறை மற்ற அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


