ஷா ஆலம், ஏப். 20. வரும் ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி கிள்ளான் வட்டாரத்திலுள்ள அங்காடி உணவுக்கடைகள் மற்றும் கியோஸ்க் எனப்படும் சிறுகடைகளில் அந்நிய நாட்டினரை வேலைக்கமர்த்த கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) தடை விதித்துள்ளது.
இந்த அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்டவர்களை இலக்காகக் கொண்ட கிள்ளான் டத்தோ பண்டாரின் தடையுத்தரவு மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான அனைத்து உணவு, பான விற்பனை அங்காடிக் கடைகள் மற்றும் பொது சந்தைகளில் உள்ள சிறுகடைகளை உள்ளடக்கியுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு இயக்குநர் நோர்பிஷா மாபிஷ் கூறினார்.
இத்தகைய அங்காடி மற்றும் சிறுகடைகளில் உள்நாட்டினர் மட்டுமே வேலை செய்ய முடியும் என்பதோடு அவர்கள் மாநகர் மன்றத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும் என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
வேலை வாய்ப்பு தொடர்பில் உள்நாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் வசமுள்ள அனைத்து வர்த்தக வளாகங்களிலும் கண்காணிப்பு முறையை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அங்காடிக் கடைகளில் தொழிலாளர்கள் பதிவு முறையை புதுப்பிப்பதற்கு ஏதுவாக அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், இந்த புதிய நிபந்தனையை அனைத்து வணிகர்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த தடையுத்தரவை பின்பற்றத் தவறும் வணிகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அவர்களின் வர்த்தக உரிமமும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.


