சிரம்பான், ஏப். 20 - போர்ட்டிக்சன், கம்போங் பெர்மாத்தாங் பாசீரில் இன்று காலை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 32 பேரைத் தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.
தாமான் லிங்கி இடமான், டாருல் விடாட் மற்றும் கம்போங் பெர்மாத்தாங் பாசீர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரண மையம் காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் பொது தற்காப்புப் படையின் இயக்குநர் முகமது நஸ்ரி மெஸ் காம் கூறினார்.
நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த குடியிருப்புகள் தாழ்வான பகுதியிலும் ஆற்றின் அருகிலும் அமைந்திருப்பதால் விரைவாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தற்போது, இன்னும் தூறல் பெய்து வருகிறது வெள்ளம் இன்னும் வடியவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பெரிய அளவிலான சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தனது குழு நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.


