ஷா ஆலம், ஏப். 20- பந்திங்கில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று மாலை பாராங் கத்தியேந்திய ஏந்திய ஆடவர் ஒருவர் மீது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர்வாசியான ஆடவர் ஒருவர் மருத்துவ அதிகாரியை நோக்கி கத்தியை காட்டி அச்சுறுத்தியது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து நேற்று பிற்பகல் 3.31 மணியளவில் தமது துறைக்குத் தகவல் கிடைத்ததாக கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது அக்மல் ரிசால் ரட்ஸி கூறினார்.
முன்னதாக, பந்திங் பகுதியில் உள்ள தனது வீட்டில் பாதிக்கப்பட்டவரான தனது சகோதரர் மூர்க்கத்துடன் செயல்படுவது தொடர்பில் மதியம் சுமார் 12.05 மணியளவில் அவரின் தம்பியிடமிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் வந்தது என்று அவர் சொன்னார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரை சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி கோல லங்காட் மாவட்ட காவல் தலைமையகத்தின் செயல்பாட்டு அறை அதன் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஊகத்தையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கோல லங்காட் போலீஸ் தலைமையக செயல்பாட்டு செயல்பாட்டு அறையை 03-3187 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 மற்றும் 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 37 மற்றும் 39வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, மூர்க்கமடைந்த நிலையில் சுகாதார ஊழியர்களை நோக்கி கத்தியைக் காட்டி அச்சுறுத்தும் நபர் மீது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்துவதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


