கோலாலம்பூர், ஏப். 20- சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கம் 2025ஐ (டி.எம்.எஸ்.2025) இயக்கத்தின் வழி எண்பது லட்சம் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பதிவு செய்து அதன் வழி 1 கோடியே 17 லட்சம் வெள்ளி வருமானத்தை ஈட்டும் இலக்கை தாண்டிவிட முடியும் என டூரிசம் சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் இயற்கை வளம் உள்ளிட்ட தனித்துவ அம்சங்களை முன்னிறுத்துவது தங்களின் சுற்றுலா ஈர்ப்பு வியூகங்களில் ஒன்றாக விளங்குவதாக டூரிசம் சிலாங்கூர் விளம்பர மேம்பாட்டு நிர்வாகி குஷைமா ஜமாலுடின் கூறினார்.
வரும் மே மாதம் ஜப்பானின் ஓசாகாவில நடைபெறவிருக்கும் அனைத்துலக கண்காட்சியில் ஜப்பானின் நாபே சுற்றுலா ஏஜென்சியுடன் டூரிசம் சிலாங்கூர் ஒத்துழைப்பு மீதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானிய மாணவர்கள் சிலாங்கூருக்கு வருகை புரிவதை ஊக்குவிப்பதை இந்த ஒத்ழைப்பு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
அடுத்த வாரம் சிகிஞ்சானில் நடைபெறவிருக்கும் நெல் வயல் விழாவில் இடம் பெறவிருக்கும் கிராம மக்களுடனான ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட நிகழ்வுகள் சுற்றுப்பயணிகளை பெரிதும் கவரும் நிகழ்வாக அமையும் என்றார் அவர்.
இங்குள்ள அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் மலேசிய சுற்றுலா முகவர்கள் சங்கமான மாட்டாவின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற கண்காட்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, வரும் ஜூலை மாதம் கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட்டில் சிறப்பு சற்றுலா ஊக்குவிப்பு கண்காட்சிக்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளத் தகவலையும் அவர் வெளியிட்டார்.


