புத்ராஜெயா, ஏப். 20- சமூக ஊடகங்களில் வைரலான தென் கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (எஸ்.கே.வி.இ.) நிகழ்ந்த கைகலப்பில் சம்பந்தபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவ நபர் அளித்தப் புகாரைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷான் கோபால் கிருஷ்ணன் தெரிவித்தார்.
சந்தேக நபர் பெயரில் இரண்டு போதைப்பொருள் குற்றப்பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
சாலையில் வேகமாக அல்லது பொறுப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 279வது பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 2,000 அபராதம் விதிக்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது என்றார்.
மேலும், வேண்டுமென்றே காயப்படுத்தியது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழும் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறது. இப்பிரிவின் கீழ் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம்.
இதன் தொடர்பான விசாரணை முடிந்ததும் அடுத்த நடவடிக்கைக்காக விசாரணை ஆவணங்கள் சிலாங்கூர் அரசு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 10.25 மணியளவில் 22 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற டோயோட்டா எஸ்திமா வாகனத்தை பெரேடுவா அல்ஸா வாகனம் இடித்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் தனது காரை நிறுத்தியபோது சந்தேக நபர் தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்து பாதிக்கப்பட்டவரின் காரின் பின்புற கண்ணாடியை உடைத்து அவரது முகத்தில் குத்தியுள்ளார்.
இந்த சம்பவம் புகார்தாரரின் காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது. 1 நிமிடம் 15 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.


