கோம்பாக், ஏப்ரல் 18 - கோம்பாக் மாவட்ட நிலையிலான காகாசான் ரும்புன் திட்டத்தை முன்னிட்டு ரவாங்கில் உள்ள பண்டார் கன்ட்றி ஹோம்ஸ் காவல் நிலையத்தை மேன்மைதகு சிலாங்கூர் ராஜா மூடா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் மற்றும் தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஆகியோர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவை வரவேற்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சபா, லஹாட் டத்துவில் நிகழ்ந்த இரத்தக்களரி சம்பவத்தை நினைவுக்கூறும் ஒரு அபிநய நிகழ்ச்சியை தெங்கு அமீர் ஷா பார்வையிட்டார்.
பின்னர், சுமார் 1 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்ட போலீஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் வகையில் தகட்டில் ராஜா மூடா கையெழுத்திட்டார்.
இதற்கிடையில், முன்பு 11 உறுப்பினர்களுடன் சமூகக் காவல் நிலையமாக செயல்பட்டு வந்த இந்நிலையம் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி மேம்படுத்தப்பட்டது என்று அயோப் கான் கூறினார்.
தற்போது 37 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட இக்காவல் நிலையம் மக்கள் தொகை 146,000 ஆக உயர்ந்துள்ள அப்பகுதியில் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை சிறப்பாக உறுதி செய்ய உதவும் என சொன்னார்.
இங்கு மக்கள் தொகை 146,000ஆக உயர்ந்துள்ளது. ஆகவே, இந்தப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு காவல் நிலையம் தேவை என்று அவர் கூறினார்.


