கோலாலம்பூர், ஏப். 18 - மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோவிட்-19
தடுப்பூசி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு தொடர்பில்
உஸ்தாஸ் அபு ஷியாபிக் என அழைக்கப்படும் முகமது ரஸ்யிக் முகமது
அல்விக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் முன்னாள் சுகாதார
அமைச்சர் கைரி ஜமாலுடின் வெற்றி பெற்றுள்ளார்.
ரெம்பாவ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
கைரிக்கு இழப்பீடாக 25 லட்சம் வெள்ளியும் வழக்கிற்கான செலவுத்
தொகையாக 50,000 வெள்ளியும் செலுத்த முகமது ரஸ்யிக்கிற்கு
உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ராஜா அகமது மோஸானுடின் ஷா ராஜா
மோஸான் உத்தரவிட்டார்.
தனக்கு எதிராக பல அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி
கைரி கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முகமது ரஸ்யிக்கிற்கு
எதிராக வழக்குத் தொடுத்தார். உஸ்தாஸ் ஷியாபிக் எனும்
இண்ட்ஸ்டாகிராம் கணக்கில் கடந்த 2021 அக்டோபர் 20ஆம் தேதியும்
2022ஆம் ஆண்டு ஜனவரி 6 மற்றும் 10ஆம் தேதிகளிலும் மூன்று
காணொளிகள் மற்றும் படங்கள் வெளியிட்டதும் அதில் அடங்கும்.
தமக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மூன்றாவது
தடுப்பூசியைப் பெற்றதாகவும் கூறியதன் மூலம் தாம் பொய்யுரைத்ததோடு
பொது மக்களை ஏமாற்றியதாகவும் தனது தடுப்பூசி நிலை குறித்து
பொய்யானத் தகவல்களை வெளியிட்டதாகவும் உஸ்தா1 ஷியாபிக்
குற்றஞ்சாட்டியிருந்தார்.


