புத்ராஜெயா, ஏப்ரல் 18 - சீன அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, சீனாவிற்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது.
மலேசியாவும் சீனாவும் தங்கள் நீண்டகால வர்த்தக உறவுகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த ஒப்புதல் கிடைத்ததாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
“சீனாவின் சுங்க பொது நிர்வாகம் (GACC) மற்றும் மலேசியாவின் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (MAFS) ஆகியவற்றுக்கு இடையேயான தாவர சுகாதாரத் தேவை நெறிமுறை மூலம் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இது நாட்டின் விவசாயத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மலேசியாவில் இருந்து சீனாவிற்கு தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான தாவர சுகாதாரத் தேவை குறித்த நெறிமுறையில் MAFS மற்றும் GACC இடையே கையெழுத்திடுவது, சீனாவில் மலேசிய தேங்காய்களின் சந்தைப்படுத்தல் மற்றும் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கு முக்கியமானது என்று முகமட் மேலும் கூறினார்.
"உள்ளூர் விவசாயிகளிடையே நல்ல மற்றும் முறையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் தேங்காய் தொழிலை வலுப்படுத்த முடியும். அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நாட்டின் விவசாய ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்க இயலும்" என்று அவர் கூறினார்.
உள்ளூர் விவசாய விளைபொருள்கள் சர்வதேச சந்தைகளில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும். இதன் மூலம் மக்கள் அதிக வருமானத்தை ஈட்டவும், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முடியும்.
— பெர்னாமா


