போர்ட்டிக்சன், ஏப். 18 - இன்று அதிகாலை 3.15 மணியளவில் சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28.3 கிலோமீட்டரில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிரம்பானிலிருந்து போர்ட்டிக்சன் நோக்கிச் செல்லும் தடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 17 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆறு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் மஸ்லான் உடின் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியதைத் தொடர்ந்து அனைத்து மோட்டார் சைக்கிளோட்டிகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விபத்தின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளைகளின் நடமாட்டத்தை எப்போதும் கண்காணித்து அவர்கள் சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதை உறுதி செய்யுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்று மஸ்லான் கூறினார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


