ஷா ஆலம், ஏப். 18 - அண்மையில் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு
குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்து
அனுதாபம் கொண்டுள்ள சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம்
(பி.கே.என்.எஸ்.) சிலாங்கூர் பிரிஹாத்தின் நிதிக்கு 10 லட்சம் வெள்ளியை
நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில்
இந்த நிதியை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலையில்
பி.கே.என்.எஸ். குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ
மாமுட் அப்பாஸ் மாநில நிதி அதிகாரி டத்தோ டாக்டர் ஹனிப் ஜைனால்
அபிடினிடம் வழங்கினார்.
பி.கே.என்.எஸ். குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக
பங்காளிகளின் பங்களிப்பை உட்படுத்திய இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட
மக்களின் சுமையைக் குறைப்பதில் தங்களின் ஒருமைப்பாட்டையும்
ஒருங்கிணைந்த கடப்பாட்டையும் புலப்படுத்துகிறது என்று டத்தோ மாமுட்
கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் குடியிருப்பு, அடிப்படைத் தேவைகள்,
சொத்துகளை இழந்துள்ளதை நாங்கள் அறிவோம். எங்களின் இந்த உதவி
அவர்களின் தேவைகளை ஈடு செய்ய உதவும் என நம்புகிறோம் என அவர்
குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிகழ்ந்த இந்த பேரிடரில்
பாதிக்கபட்டவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசின் இந்த
சிலாங்கூர் பிரிஹாத்தின் நிதிக்கு மேலும் அதிகமானோர் நிதியுதவி
வழங்குவர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
உதவிகளை எவ்வாறு வழங்குவது எனத் தெரியாமலிருப்பவர்கள்
தாராளமாக பி.கே.என்.எஸ். அலுவலகத்திற்கு வரலாம். நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். இத்தகைய உதவிகளை வழங்குவோருக்கு வரிச்சலுகை பெற்றுத் தர நாங்கள் உதவுவோம் என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிலாங்கூர் பிரிஹாத்தின்
நிதிக்கு இதுவரை 47 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி வசூலாகியுள்ளதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.


