காஸா, ஏப்.18 - காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் தாக்குதல்களில் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) கூறியது.
கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின்
எண்ணிக்கை 51,065 ஆக அதிகரித்துள்ளதோடு மேலும் 116,505 பேர் காயமடைந்துள்ளதாக அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள அல்லது சாலைகளில் கைவிடப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை அவசர உதவிக் குழுக்களால் இன்னும் அணுக முடியவில்லை என்று அதே வட்டாரம் குறிப்பிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும் படுகொலையைத் தடுக்கவும் காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்கவும் அனைத்துலக நீதிமன்றம்
உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.


