பிரிக்பீல்ட்ஸ், ஏப்ரல் 18 - பள்ளி மாணவர்கள் மத்தியில் குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதோடு, கதை சொல்லும் களத்தை உருவாக்கி, மாணவர்களின் மொழி ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், 'வாசிப்பை நேசிப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாலான் செராஸ் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கம் மற்றும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கத்தின் கூட்டு முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம், மொழியாற்றல் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும் என்று எதிரபார்க்கப்படுகிறது.
வாசிப்பை நேசிப்போம் என்ற திட்டத்தின் வாயிலாக, 61 கதைகள் அடங்கிய நித்திரைக் கதைகள் எனும் சிறுகதை தொகுப்பு நூலும் வெளியீடு செய்யப்பட்டது.
வினோதம், அசாத்தியம், கடல் தேவதை, நீர்வாழ் விலங்கு, காட்டு விலங்கு, செல்லப் பிராணி, குடும்பம் மற்றும் நண்பர்கள், அறிவியல், போட்டி விளையாட்டு மற்றும் நற்பண்புகள் என பத்து கதைக் கருக்களைக் கொண்டு, இரண்டு நூலாசிரியர்களின் கைவண்ணத்தில், இச்சிறுகதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
இதனிடையே, வாசிப்பை நேசிப்போம் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், நித்திரைக் கதைகள் எனும் சிறுகதை தொகுப்பு நூலைஅனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்கும் முயற்சிகளிலும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கம் ஈடுபட்டு வருகின்றனர்
எனவே, இத்திட்டத்தில் பங்கேற்க அல்லது மேல் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள விரும்புவோர், Dimension Book எனும் முகநூல் பக்கத்தையும் வலம் வரலாம்.
பெர்னாமா


