புத்ராஜெயா, ஏப். 18 - நாட்டில் நெகிழிப்பைகளால் (பிளாஸ்டிக்) ஏற்படும்
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கான ஆக்ககரமான நடவடிக்கையின்
ஒரு பகுதியாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், மத்திய/மாநில அரசு பூங்காக்கள், புவியில் பகுதிகள், புவியில் பாரம்பரியப் பகுதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில வர்த்தக வளாகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
புத்ரா ஜெயாவில் நேற்று நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான
அமைச்சர்கள் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில்
இந்த தடைக்கு இணக்கம் காணப்பட்டது என்று இயற்கை வளம் மற்றும்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகளுக்கான தடை
நிரந்தர வணிக வளாகங்களான பேரங்காடிகள், பல்பொருள் விற்பனை
மையங்கள், பெட்ரோல் நிலையங்களில் உள்ள அங்காடிக் கடைகள்,
தொடர் விற்பனைக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் தொடர்புடைய இதர
மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த தடை அமலாக்க செயல்முறை அந்தந்த மாநிலங்களின் வசதிக்கேற்ப
வரையறுக்கப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
சட்டவிரோத மின்-கழிவு இறக்குமதி அதிகரிப்பின் காரணமாக நாட்டில்
அதிகரித்துள்ள சட்டவிரோத மின்-கழிவு பதனீட்டு நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்துவதில் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒத்துழைப்பை
வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத மின்-கழிவு பதனீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் லைசென்ஸ்
இல்லாத வளாகங்கள் மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடுமையான
நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதில் ஒருபோதும் சமரசப்
போக்கு கடைபிடிக்கப்படாது என்ற சமிக்ஞையை சம்பந்தப்பட்ட
தரப்பினருக்கு அனுப்புவதற்கு இந்த கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.


