கிள்ளான், ஏப். 18 - இம்மாதம் 11 ஆம் தேதி கிள்ளானின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் கிள்ளானில் நிலையான வெள்ள நீர்த் திட்டம் (கே.எல்.ஏ.எஸ்.எஸ்.) மூலம் வெள்ளத் தணிப்பு முன்னெடுப்பு சரியான தடத்தில் செல்கிறது என்று டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திலிருந்து கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டதாகவும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை வலுப்படுத்த அதனைப் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
கே.எல்.ஏ.எஸ்.எஸ். என்பது ஐந்தாண்டுத் திட்டமாகும். மேலும் இந்தத் திட்டத்தை கொள்முதல் மற்றும் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளுக்கு உட்பட்டு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, இத்திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள முடியாது என அவர் சொன்னார்.
தற்போதைய திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு சமீபத்திய வெள்ள சம்பவத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை நாங்கள் பயன்படுத்துவோம் என நேற்றிரவு இங்கு நடைபெற்ற கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
வெள்ளத்தைத் தடுப்பதற்கு ஏதுவாக வடிகால் அமைப்புகளை முறையாக பராமரித்து திட்ட மேம்பாட்டுப் பகுதிகளுக்கு தளங்களுக்கு அருகில் நீர் சேகரிப்பு குளங்களை நிர்மாணிப்பதை உறுதி செய்யும்படி தனது அதிகார வரம்பிற்குள் செயல்படும் மேம்பாட்டாளர்களுக்கு மாநகர் மன்றம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக
ஹமீட் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கிள்ளானில் வடிகால் அமைப்பில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் கழிவுகளை முறையாக நிர்வகிக்கத் தவறும் வணிக வளாக உரிமையாளர்களுடன் மாநகர் மன்றம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் அவர் கூறினார்.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மூலம் வடிகால் அமைப்புகளைத் தடுக்கும் மேம்பாட்டாளர்கள் அல்லது வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


