ஷா ஆலம், ஏப். 18 - இம்மாதம் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களுக்கு உதவ எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் மற்றும் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் உறுதியளித்துள்ளனர்.
நிதியுதவி தேவைப்படும் வர்த்தகர்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதோடு வர்த்தக மீட்சிக்கு உதவும் பொருட்டு பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) திட்டத்தின் கீழ் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று எம்.பி.ஐ. அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
இந்த பேரிடர் காரணமாக பல வர்த்தகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் கோல சுங்கை பாருவைச் சேர்ந்தவர்களாவர். நாங்கள் இன்னும் தரவுகளைச் சேகரித்து வருகிறோம். மேலும் பலருக்கு நாம் உதவும் சாத்தியம் உள்ளது என அவர் சொன்னார்.
இறைவன் அருளால் அவர்களின் தொழில்களை மீண்டும் மீட்சியுறச் செய்வதற்கு பிளாட்ஸ் பல திட்டங்களைத் தயாரித்துள்ளது. எம்.பி.ஐ. அறக்கட்டளை மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் தரப்பினர் அவர்களுக்கு உதவுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க எம்.பி.ஐ. அறக்கட்டளை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் வீடுகளைச் சரிசெய்வதற்கான உதவியை வழங்குவதன் மூலமும் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.
வேறு எந்த தரப்பினரும் உதவிக்கு முன்வரவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை உடனடியாக சரிசெய்ய எம் பி.ஐ. அறக்கட்டளையிடம் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8.10 மணியளவில் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் கசிவினால் வெடிப்பு ஏற்பட்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வானில் 30 மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. அங்கு வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது


