குவாந்தான் ஏப். 18 - கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் (எல்.டி.பி.1)
211வது கிலோ மீட்டரில் குவாந்தான் நோக்கிச் செல்லும் தடத்தில்
போலீசார் மேற்கொண்ட அதிரச் சோதனையின் போது நான்கு சக்கர
இயக்க வாகனத்திலிருந்து ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள
468.3 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப்
பிரிவினர் நேற்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
மேற்கொண்ட ‘கிழக்கு மண்டலத்திற்கான முதன்மை சோதனை‘
நடவடிக்கையின் போது ரோந்துப் போலீசார் அந்த வாகனத்தை கண்டதாகப்
பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, மிட்சுபிஸி டிரைட்டோன் ரக
வாகனம் ஒன்று சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு எதிர் திசையில்
பயணிப்பது குறித்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட
ரோந்துப் போலீஸ் குழுவினர் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இன்றி
பூட்டப்பட்ட நிலையில் அந்த வாகனம் சாலையோரம் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளத்தைக் கண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது அதன் பின்புறம் 22 கருப்பு நிற
பிளாஸ்டிக் பைகளில் ‘சைனீஸ் பின் வேய்‘ என எழுதப்பட்ட ஷாபு என
சந்தேகிக்கப்படும் 440 பளிங்கு நிற கட்டிகள் அடங்கிய 440 பொட்டலங்கள்
இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
அந்த வாகனத்தின் உரிமையாளரை அடையாளம் காணும் முயற்சியில்
தாங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அவர், சம்பவத்தின் போது இக்காட்சி
தங்கள் டாஷ்கேம் கேமராக்களில் பதிவான வாகனமோட்டிகள்
விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


