ஷா ஆலம், ஏப். 17 - இம்மாதம் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை 25 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
தற்காலிக நிவாரண மையத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 10,000 வெள்ளி மற்றும் 265 பள்ளி மாணவர்களுக்கு தலா 500 வெள்ளி ரொக்கம் ஆகியவை அந்த உதவித் திட்டங்களில் அடங்கும் என்று எம்.பி.ஐ. அறக்கட்டளைத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற எம்.பி.ஐ. கெமிலாங் ஐடில்ஃபித்ரி விழாவில் எம்.பி.ஐ. துணை நிறுவனங்கள் மற்றும் விவேக பங்காளிகளிடமிருந்து பெறப்பட்ட 20 லட்சம் வெள்ளி நிதி சிலாங்கூர் பிரிஹாத்தின் நிதிக்கு அனுப்பப்பட்டது.
இது தவிர, பாதிக்கப்பட்ட 37 மாணவர்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள கித்தா சிலாங்கூர் புத்தக பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் தகவல் தொடர்பு அமைச்சிடமிருந்து மடிக்கணினிகளையும் நன்கொடையையும் பெற்றனர் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான அறக்கட்டளையின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இந்த நன்கொடைகள் அனைத்தும் அமைந்துள்ளதாக அஸ்ரி கூறினார்.
கனத்த கண்களுடன் பார்த்துக்கொண்டும் அதிக சுமைகளைத் தோள்களில் ஏந்திக் கொண்டும் பாதிக்கப்பட்டவர்கள் சுமக்கும் சுமைகளுக்கு எம்.பி.ஐ. அறக்கட்டளை அனுதாபம் தெரிவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1 ஆம் தேதி காலை சுமார் 8.10 மணியளவில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு எழுந்து வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.


