கோலாலம்பூர், ஏப். 17- இங்குள்ள பிரிக்பீல்ட்ட்ஸ் வட்டாரத்தில்
முறையான ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டினரை வேலைக்கு
அமர்த்திய சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உணவகங்களை
இலக்காகக் கொண்டு குடிநுழைவுத் துறை நேற்றிவு நடத்திய
சோதனையில் 15 வெளிநாட்டினரும் உள்நாட்டுத் தம்பதியரும் கைது
செய்யப்பட்டனர்.
இரவு 9.00 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனையில் மொத்தம் 47
அந்நிய நாட்டினர் சோதனையிடப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்
துறையின் இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசுப் கூறினார்.
இந்நடவடிக்கையின் போது 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 13
வங்காளதேசிகளும் இரு பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான வங்காளதேசிகளில் ஒருவர் அந்நியத் தொழிலாளர்களின்
முதலாளி என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களோடு அந்நியத்
தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கமர்த்தியது தொடர்பில்
உள்நாட்டு ஜோடியும் தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
அந்த அந்நியத் தொழிலாளர்கள் அனைவரும் தற்காலிக வருகை
அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தியதோடு முறையான ஆவணங்கள்
இன்றி வேலை செய்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில்
கண்டறியப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் போது அந்நியத் தொழிலாளர்கள் சிலர்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து சோதனையிலிருந்து தப்ப முயன்றனர்.
எனினும் அதிகாரிகளின் சாதுரியத்தால் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்
என்றார் அவர்.
சோதனையிடப்பட்ட வளாகங்களில் ஒன்றின் பின்புறம் விடுதிகள் போல்
தங்கும் வசதியுடன் கூடிய இடம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், அந்த தொழிலாளர்களின் உறைவிடமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
பெரும்பாலான அந்நிய நாட்டினர் கட்டுமானத் தொழில்துறைக்கான
வேலை பெர்மிட்டுகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்கள் தினசரி 50
முதல் 100 வெள்ளி வரையிலான சம்பளத்தில் கேஷியர், சமையல்காரர்
உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர் என்று அவர்
கூறினார்.


