பாசீர் பூத்தே, ஏப். 17 - கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (இ.சி.ஆர்எல்.) திட்டம் வரும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோத்தா பாருவிலிருந்து சிலாங்கூர் வரையிலான திட்டப் பணிகள் கடந்த மாத நிலவரப்படி 81.07 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் பணி மேம்பாடு திரங்கானுவில் 90 விழுக்காடாகவும் பகாங்கில் 86 விழுக்காடாகவும் உள்ளது.
கிளந்தான் மாநில அரசு திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில், குறிப்பாக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக மலேசிய ரயில் லிங்க் சென். பெர்ஹாட் (எம்ஆர்எல்) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் கூறினார்.
கிளந்தானில் 43 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையின் பணி முன்னேற்றம் 88.86 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த திட்டத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. சோதனை மற்றும் இயக்க செயல்முறை 2026 ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தா பாருவில் உள்ள துஞ்சோங்கிலிருந்து பகாங்கில் உள்ள மாரான் வரையிலான 400 கிலோமீட்டர் மற்றும் கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங்கின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்று அவர் கூறினார்.
இன்று பாசீர் பூத்தே இ.சி.ஆர்.எல். நிலையத் திட்ட மேம்பாட்டை ஆய்வு செய்த பின்னர் டார்விஸ் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
கிளந்தான், துஞ்சோங் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய இடங்களில் இரண்டு இரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் ஊக்கமளிக்கும் வகையில் முன்னேற்றத்தைப் பதிவு செய்து முறையே 69 மற்றும் 68 விழுக்காட்டை எட்டியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த இரண்டு நிலையங்களின் பணிகளும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.


