சிப்பாங், ஏப். 17 - மலேசியாவுக்கான மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று காலை கம்போடியாவுக்குப் புறப்பட்டார்.
அதிபர் ஜி மற்றும் அவரது பேராளர் குழு பயணம் செய்த ஏர் சீனா விமானம் காலை 10.04 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
பூங்கா ராயா முனையத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் முதலாவது பட்டாளத்தின் ரேஞ்சர் படைப்பிரிவு (சடங்கு) அதிபர் ஜி ஜின்பெங்கிற்கு மரியாதை அணிவகுப்பை நடத்தியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் ஆகியோர் விமான நிலையத்தில் சீனப் பேராளர் குழுவை வழியனுப்பி வைத்தனர்.
கோம்பாக், அர்ஜுனாசுக்மா அகாடமியின் கலைஞர்களால் படைக்கப்பட்ட பாரம்பரிய மலாய், சீன மற்றும் இந்திய வாத்திய இசையின் துள்ளலான தாளங்கள் பிரியாவிடை விழாவுக்கு மெருகூட்டியது.
காஜாங், யு ஹுவா தேசியப் பள்ளி, சைபர்ஜெயா தேசியப் பள்ளி, இசைக்குழுவின் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் இசை கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் ஜின்பிங் கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாவுக்கு தனது மூன்று பயணத்தைத் தொடக்கினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 12 ஆண்டுகளில் அவர் மலேசியாவிற்கு மேற்கொண்ட இரண்டாவது வருகை இதுவாகும். அப்போது இரு நாடுகளும் அரசதந்திர உறவுகளை விரிவான விவேக பங்காளித்துவ நிலைக்கு மேம்படுத்தின.
நேற்று அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அரசு வரவேற்பு விழா நல்கப்பட்டது. ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடந்த இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் அன்வாரும் அதிபர் ஜியும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். மேலும் பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த பயணத்தின் போது மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் குறிப்புகள் கையெழுத்திடும் நிகழ்வை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.


