புத்ரஜெயா, ஏப்ரல் 17: 2024 எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மலேசிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 3,337 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை எழுத மொத்தம் 402,956 பேர் பதிவு செய்துள்ளதாகக் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
“குறிப்பிட்ட நாளில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
“தனியார் தேர்வு முடிவுகள் தபால் மூலம் அனுப்பப்படும் அல்லது தேர்வு எழுத பதிவு செய்த மாநில கல்வித் துறையைத் தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் சீராக வழங்கப்பட, அவற்றை சமர்ப்பிக்கும் செயல்முறை திறமையாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்படுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, மாணவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 30 மாலை 6 மணி வரை myresultspm.moe.gov.my என்ற இணையத்தளம் வழியாகவும் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம்.
மேலும், அதே காலத்திற்குள் 15888 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மூலம் தேர்வு முடிவை பெறலாம்.
– BERNAMA


