கோலாலம்பூர், ஏப். 17 - சபா மற்றும் ஜோகூரில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி
மொத்தம் 211 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 54 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேராக இருந்த நிலையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 54 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேராக அதிகரித்துள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
பியூபோர்ட்டில் ஆறு கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் பியூபோர்ட், சிலகானில் உள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர் என்று அது கூறியது.
ஜோகூர் மாநிலத்தில் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேராகப் பதிவாகியுள்ளது. அவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் சிகாமாட்டில் உள்ள இரண்டு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர் என்று மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் கம்போங் பத்து பாடாக் சமூக மண்டபத்திலும் எஞ்சிய ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் கம்போங் தாசேக் சமூக மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


