NATIONAL

புதிய தொழில்நுட்பத் துறைகளில் மலேசியா சீனாவுடன் இணைந்து பணியாற்றும்- பிரதமர்

17 ஏப்ரல் 2025, 4:29 AM
புதிய தொழில்நுட்பத் துறைகளில் மலேசியா சீனாவுடன் இணைந்து பணியாற்றும்- பிரதமர்

புத்ராஜெயா, ஏப்ரல் 17 - பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத் துறைகளில்  சீனாவுடன் இணைந்து பணியாற்ற மலேசியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியா, சீனாவை நெருங்கிய நண்பராகவும் அண்டை நாடாகவும் மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் விரிவான விவேகப் பங்காளித்துவத்தின் முக்கியமான சகாவாகவும் பார்க்கிறது என்று அன்வார் கூறினார்.

நாங்கள் சீனாவில் (2023 ஆம் ஆண்டு) சந்தித்தபோது, ​​(அதிபர்) ஜி (ஜின்பிங்) மேம்பாடு, முதலீடு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு பற்றிப் பேசும் ஒரு புதிய வகையான ஆளுமை நிறைந்த  தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று அவர் நேற்று  ஸ்ரீ பெர்டானாவில்  சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவதற்கு முன்பு வெளியிட்டக் கருத்தில் கூறினார்.

அதிபர் ஜி மற்றும் அவரது பேராளர்  குழுவினர் மாலை 5.05 மணிக்கு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தனர். அங்கு அவர்களை அன்வார் அன்புடன் வரவேற்றார். தேசிய கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அகாடமியின் கலாச்சார நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.

பின்னர் விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட அதிபர் ஜி, தனிப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி,  டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப்,  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்   பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி  வீட்மைப்பு மற்றும் ஊராட்சித் துறை  அமைச்சர் ங்கா கோர் மிங், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது  ஹசான்,  முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ்,  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங், மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காடீர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், பகிரப்பட்ட சுபிட்சம் மற்றும் நாகரிக முன்னேற்றம் குறித்த ஜின்பிங்கின் தொலைநோக்குப் பார்வை உயர்வானது என்பதோடு உலகத் தலைவர்கள் அரிதாகவே வெளிப்படுத்தக்கூடியது என்று அன்வார் கூறினார்.

உங்கள் விடாமுயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அதற்காக மலேசியர்கள் உங்களை வரவேற்கிறார்கள். அதிபர் ஜி ஒரு சிறந்த நாட்டின் அதிபர் மட்டுமல்லாமல் உண்மையான நண்பராகவும் விளங்குகிறார்.

பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய தொழில்நுட்பம், ஏ.ஐ. முன்னெடுப்பு மற்றும் பல ஆண்டுகளாக விவாதித்த அனைத்து தொடர்புடைய முறைகள் உட்பட பல்வேறு துறைகளில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். உங்கள் தலைமைத்துவத்திற்கும் நட்புக்கும் ஸீ ஸீ (நன்றி) என்று அன்வார் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.