மூவார், ஏப்ரல் 17- இன்று காலை ஜாலான் சாலே - புக்கிட் பாசீரில் 30 பயணிகளை ஏற்றிச் சென்ற தொழிற்சாலை பேருந்து மீது கார் மோதியதில் இரண்டு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
அதிகாலை காலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 21 மற்றும் 26 வயதுடைய ஓட்டுநர் மற்றும் பயணி பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் தமது துறைக்கு காலை 6.18 மணிக்கு அழைப்பு வந்ததாக
மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு அதிகாரி முகமது பாஸ்லி மாட் ஜினின் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரும் பெரோடுவா ஆக்சியா காரின் இருக்கைகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை அங்கிருந்த மருத்துவக் குழு உறுதி செய்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இவ்விபத்தில் 49 வயதான பேருந்து ஓட்டுநர் மற்றும் 30 பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை.


