புத்ராஜெயா, ஏப். 17- பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை
வலுப்படுத்துவது தொடர்பான 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் நேற்று
பரிமாறிக் கொண்டனர்.
அதிபர் ஜின் ஜின் பெங் மலேசியாவுக்கு மேற்கொண்டுள்ள அரசுமுறைப்
பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பிற்பகல் இங்குள்ள ஸ்ரீ
பெர்டானாவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு
நடைபெற்றது.
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செய்தி மற்றும் தகவல் துறையில்
மலேசியாவுக்கும் சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்திற்கும்
இடையிலான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மலேசியாவைப் பிரதிநிதித்து தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ
ஃபாஹ்ம் பாட்சில் மற்றும் மலேசியாவுக்ன சீன அரசதந்திரி ஒவ்யாங்
யுஜிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தேசிய ஒளிபரப்பு நிறுவனமான ஆர்.டி.எம். மற்றும் சின்ஹூவா ஆகியவை
கூட்டு ஊடக நடவடிக்கைகளில், குறிப்பாக செய்தி பரிமாற்றம், நிகழ்ச்சித்
தயாரிப்பு மற்றும் கூட்டு ஆவணப் படத்தயாரிப்பின் மூலம் சம்பந்தப்பட்ட
நாடுகளின் தனித்துவத்தை வெளிப்படுத்தி ஆழமான பரஸ்பர புரிதலை
வளர்ப்புதற்குரிய வாய்ப்பினை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும்.
இதனிடையே உலகளாவிய பாதுகாப்பு முயற்சியில் ஒத்துழைப்பை
கூட்டாக மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசானும் சீன வெளியுறவு
அமைச்சர் வாங் இயும் கையெழுத்திட்டனர்.
வர்த்தகச் சேவைத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது
தொடர்பான முன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் அப்துல் அஜிஸ் மற்றும் சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வெண்டவோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இரயில்வே துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில்
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் சீனப் போக்குவரத்து
அமைச்சர் ஓயாங் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.


