ஷா ஆலம், ஏப். 17 - முகநூலில் வெளியான இல்லாத முதலீட்டுத்
திட்டத்தால் கவரப்பட்ட தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் தனது
சேமிப்புத் தொகையான 26 லட்சத்து 52 ஆயிரம் வெள்ளியை இழந்தார்.
உள்நாட்டவரான அந்த 54 வயது நிர்வாகி முகநூலில் சந்தேக நபர்
வெளியிட்ட முதலீட்டு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு அதன் இணைப்பை
அழுத்தி புலனத்தில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக சிலாங்கூர்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
பின்னர் தன்னை முதலீடு தொடர்பான விபரங்களை பயிற்றுவிப்பவர் எனக்
கூறிக் கொண்ட ஆடவர் அந்த நிர்வாகியைத் தொடர்பு கொண்டு
சம்பந்தப்பட்ட முதலீடு தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட அந்த நிர்வாகி புலனக் குழு ஒன்றில் இணைந்து
சுமார் இரண்டு மாத காலத்திற்கு முதலீட்டு நடவடிகைகையில்
ஈடுபட்டுள்ளார் என அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
தொடக்கத்தில் லாபத் தொகையாக 100,000 வெள்ளி கிடைத்ததைத்
தொடர்ந்து அந்த நிர்வாகிக்கு அந்த திட்டம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் 44 பரிவர்த்தனைகள் மூலம் ஒன்பது வங்கிக் கணக்குகளில்
26 லட்சத்து 52 ஆயிரம் வெள்ளியை அவர் செலுத்தியுள்ளார் என
ஹூசேன் சொன்னார்.
தனது லாபத் தொகையை மீட்க முயன்ற போது பல்வேறு வரிகளைச்
செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தாம்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நிர்வாகி இது குறித்து ஷா ஆலம்
போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிப்பாங்கில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் உள்நாட்டு
வருமான வரி வாரியம் மற்றும் பேங்க் நெகாரா அதிகாரிகள் எனக் கூறிக்
கொண்ட கும்பலிடம் ஜெர்மன் பிரஜை ஒருவர் 30 லட்சம் வெள்ளியைப்
பறிகொடுத்த தாக ஹூசேன் மேலும் தெரிவித்தார்.


