ஷா ஆலம், ஏப்ரல் 17 - மலேசியா மாஹிர் அறவாரியம், தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து 'எதிர்கால நுட்பவியல் தொழிற்கல்வி & நுட்பவியல் விழா 2025 எனும் நிகழ்ச்சியை அண்மையில் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் குறித்த விளக்கம், அதை கையாளும் விதம், பல்லூடகக் கண்காட்சி, கணினியின் மென்பொருளின் அறிமுகம், மின்சார வாகனத்தின் தனித்தன்மை மற்றும் அதன் எதிர்காலம் குறித்த விளக்கம், தொழிற்கல்வி & தொழில்நுட்பக் கல்வியினால் உருவாகும் வேலை வாய்ப்புக்கான விளக்கவுரை என்று பலதரப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றன.
செயற்கை நுண்ணறிவு, Automation எனப்படும் தானியங்கி முறை, EV எனப்படும் மின்சார வாகனங்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மீது மாணவர்கள் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்கால சாவல்களை எதிர்கொள்ளும் திறனாற்றலை அவர்களால் வளர்த்து கொள்ள முடியும் என்பதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம் என்று மாஹிர் அறக்கட்டளையின் இயக்குநர் டத்தோ ஹஜி நூருல் அரிபின் அப்துல் மஜித் தெரிவித்தார்.
இதனிடையே, மனித திறன்களையும் தொழில்நுட்ப திறனாற்றலையும் விதைக்கும் இத்தகைய தொலைநோக்கு சிந்தனையுடைய நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தொடர வேண்டும் பள்ளியின் தலைமையாசிரியர் குணசேகரன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் காட்டிய ஆர்வத்தின் பயனாக, தேர்தெடுக்கப்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு ஆளில்லா விமான மற்றும் கோடிங் பயிற்சியை இலவசமாக வழங்குவதாகப் பள்ளி மேலாளர் வாரியம் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா


