ஈப்போ, ஏப். 17- ஈப்போ-கோலாலம்பூர் கூட்டரசு சாலையின் 67வது கிலோ
மீட்டரில் தாப்பா அருகே நேற்று நிகழ்ந்த மோட்டார் சைக்கிள்-லோரி
சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்தார்.
சார்ஜன் பதவி வகிக்கும் 42 வயதுடைய அந்த போலீஸ்காரர் காலை 10.45
மணியளவில் தாப்பா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜோஹாரி யாஹ்யா கூறினார்.
தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணி புரியும் அந்த
போலீஸ்காரர் ஓட்டிச் சென்ற ஹோண்டா ஆர்.எஸ்.எக்ஸ். மோட்டார்
சைக்கிள் நாளிதழ்களை ஏற்றி வந்த இஸூசு ரக லோரியுடன் மோதியதாக
நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இருபத்தாறு வயது ஆடவர் ஓட்டி வந்த அந்த லோரி ரூமா அவாம் 3
குடியிருப்பு பகுதியிலிருந்து திடீரென பிரதான சாலையில் நுழைந்ததால்
அந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து
அதனை மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக அந்த
போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல்
சவப்பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்டது. மேல் விசாரணைக்காக லோரி ஓட்டுநர் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்கு அந்த லோரி ஓட்டுநர் இன்று
நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் எனக் கூறிய அவர், இந்த விபத்து
தொடர்பில் 1987ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சொன்னார்.


