புத்ராஜெயா, ஏப்ரல் 17 - முழுமையில்லாத தேசியக் கொடியின் படத்தின் பிரசுரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) குவோங் வோங் யிட் போ நாளிதழுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அந்தப் படம் நேற்று ஊடக அமைப்பின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் பதிவேற்றப்பட்டதாக எம்.சி.எம்.சி. நேற்றிரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இணையத்தில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்தில் நிந்திக்கும் வகையிலான குற்ற அம்சம் இருப்பதால் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக அது கூறியது.
இந்த விவாகாரத்தை தாங்கள் கடுமையாகக் கருதுவததோடு இதன் தொடர்பான விசாரணையில் உள்துறை அமைச்சு மற்றும் அரச மலேசியா காவல்துறையுடன் ஒத்துழைப்பதாக அந்த ஆணையம் குறிப்பிட்டது.
மலேசியக் கொடியை கேலி செய்யும் அல்லது முழுமையற்ற வடிவத்தில் சித்தரிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றவோ அல்லது பரப்பவோ கூடாது என்று ஊடக நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் எம்.சி.எம்.சி எச்சரித்தது.
இந்த விதிமுறையை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம். மலேசியாவில் இலக்கவியல் ஊடகப் பயன்பாடு முறையாக இருப்பதையும் தேசிய சின்னங்களை மதிக்கப்படுவதையும் உறுதி செய்ய எம்.சி.எம்.சி உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மலேசியா அரசு முறைப் பயணம் குறித்த செய்தியில் சின் சியூ டெய்லி எனும் சீன நாளேடு இதேபோல் பிறை நிலவு இல்லாத மலேசியக் கொடியை வெளியிட்டிருந்தது.


