கூச்சிங், ஏப்ரல் 16 - கூரியர் எனப்படும் துரித பட்டுவாடா சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருளை கடத்தும் நடவடிக்கையை அரச மலேசிய சுங்கத் துறை கடந்த மாதம் 14ஆம் தேதி வெற்றிகரமாக முறியடித்தது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 12 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த மார்ச் 14 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் மிரி, ஈஸ்ட்வுட் பள்ளத்தாக்கு தொழிலியல் பூங்காவில் உள்ள ஒரு துரித பட்டுவாடா சேவை நிறுவனத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சுங்க அதிகாரிகள் குழு மேற்கொண்ட முதலாவது நடவடிக்கையில் அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சரவாக் மாநில சுங்கத் துறை இயக்குநர் நோரிசான் யஹ்யா தெரிவித்தார்.
அந்த வளாகத்தில் இருந்த ஒரு பொட்டலத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது அதில் 603,371வெள்ளி மதிப்புள்ள 3.6 கிலோ எக்ஸ்டசி போதை மாத்திரைகளும் 50,600 வெள்ளி மதிப்புள்ள 1.01 கிலோ கெத்தமின் போதைப்பொருளும் இருப்பது கண்டறியப்ட்டது.
இரண்டாவது பறிமுதல் அதே நாளில் அதே நிறுவனத்தில் செய்யப்பட்டது. உணவுப் பொருட்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்றில் 577,653 வெள்ளி மதிப்புள்ள 3.45 கிலோ எடையுள்ள எக்ஸ்டசி இச்சோதனையின்போது கண்டு பிடிக்கப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியாவிலிருந்து சரவாக்கிற்கு விமான மூலம் துரித பட்டுவாடா சேவையைப் பயன்படுத்தி மக்கள் வசிக்காத முகவரிகளுக்கு பார்சல்களை அனுப்புவதே கும்பலின் கடத்தல் பாணியாகும் என நோரிசன் கூறினார்.
இந்த பறிமுதல் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.


