ஷா ஆலம், ஏப். 16 - இம்மாதம் 1ஆம் தேதி சுபாங் ஜெயா, புத்ரா
ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு தொடக்கிய சிலாங்கூர் பிரிஹாத்தின் நிதிக்கு 47 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி திரண்டது.
இந்த நிதிக்கு நன்கொடை வழங்கிய மற்றும் பேரிடருக்கு பிந்தைய
புனர்வாழ்வு முயற்சிகளுக்கு பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் தாம்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
மக்களின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து முயற்சிகள்,
ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை உணர்வு தொடர்ந்து வலுப்பெறும் என
நம்புகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்
தெரிவித்தார்.
முன்னதாக அவர், எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பான சிறப்பு விளக்க
கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பேரிடரின் தாக்கத்தை
கையாள்வதிலும் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு தொடர்ந்து
முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் மாநில அரசு
எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் இக்கூட்டத்தில்
விளக்கமளித்தார்.
முன்னதாக, தனியார் துறையினர், பெரு நிறுவனங்கள் மற்றும்
தனிநபர்கள் வழங்கிய நன்கொடைகளை மாநில அரசு பெற்றுக்
கொண்டது.
கடந்த ஏப்ரல் 1ஆம் காலை 8.10 மணியளவில் ஏற்பட்ட எரிவாயு குழாய்
வெடிப்பின் காரணமாக தீ சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு கொளுந்து
விட்டெரிந்தது. தீயின் காரணமாக அப்பகுதியில் வெப்ப நிலை சுமார் 1,000
டிகிரி செல்சியசைத் தாண்டியது.


