கோலாலம்பூர், ஏப்ரல் 16 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு நேற்று தொடங்கி மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இன்று இஸ்தானா நெகாராவில் அரசாங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாரா வந்த அதிபர் ஜின்பிங்கை சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இஸ்தானா நெகாரா அணிவகுப்பு மைதானத்தில் அரச மலாய் ரெஜிமென்ட் மத்திய இசைக்குழுவால் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 41வது அரச காலாட் படையின் 21 மரியாதை வேட்டு கிளப்பப்பட்டது.
பின்னர் அதிபர் ஜின்பிங், மேஜர் முகமது வாகியுடின் அப்துல் ரஹ்மான் தலைமையிலான சுங்கை பீசி முகாமைச் சேர்ந்த அரச மலாய் பட்டாளத்தின் முதலாவது படைப்பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் மற்றும் 103 வீரர்கள் பங்கேற்ற பிரதான மரியாதை அணிவகுப்பை பார்வையிட்டார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு, சீன அதிபரின் வருகைக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இஸ்தானா நெகாராவில் தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறையால் நடன நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
பின்னர் டேவான் ஶ்ரீ மகாராஜாவில் நடைபெற்ற நினைவு பரிசு வழங்கும் நிகழ்வை சுல்தான் இப்ராஹிம் கண்டதோடு அதிபர் மற்றும் சீனக் குழுவுடன் சந்திப்பையும் நடத்தினார்.
இக்கூட்டத்திற்குப் பிறகு அதிபர் ஜின்பிங் மற்றும் அவரது பேராளர் குழு உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் பிரதான மண்டபத்தில் மாட்சிமை பேரரசர் ஒரு அரசாங்க விருந்து வழங்குவார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு கடைசியாக ஜின்பிங் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டார். 12 ஆண்டு கால பதவி காலத்தில் ஜின்பிங்கின் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வ பயணமாக இது அமைகிறது.
அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் இப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஜி ஜின்பிங், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இன்று மாலை பிரதமர் அன்வாரை சந்திக்க உள்ளார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக பிரதமர் அன்வார் புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் அதிகாரப்பூர்வ இரவு விருந்தை வழங்குவார்.


