ஷா ஆலம், ஏப். 16 - புத்ரா ஹைட்ஸில் கடந்த ஒன்றாம் தேதி ஏற்பட்ட
எரிவாயு குழாய் வெடிப்பின் காரணமாக எரிவாயு விநியோகத்தில்
ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்காக டீசலை கையிருப்பில்
வைப்பதற்கு நிறுவனங்கள் செய்யும் ஊராட்சி மன்ற நிலையிலான
விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை மாநில அரசு விரைவுபடுத்தும்.
நிறுவனங்களுக்கு குறிப்பாக, பொருள்கள் கெடாமலிருப்பதற்கும் வர்த்தக
நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும் குளிர்பதன கிடங்கு சேவையை
சார்ந்திருக்கும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் விரைந்து எடுக்கப்படும்
சில நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று முதலீடு, வர்த்தகம்
மற்றும் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி
ஹான் கூறினார்.
எரிவாயு விநியோகத்தை மீண்டும் வழக்க நிலைக்கு கொண்டு
வருவதற்காக தாங்கள் பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் மற்றும் இதர
பங்களிப்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக அவர்
சொன்னார்.
நேற்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெற்ற
இன்வெஸ்ட் சிலாங்கூரின் 2025 நோன்புப் பெருநாள் வர்த்தக
ஒருங்கமைப்பு நிகழ்வின் போது மீடியா சிலாங்கூரிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற மாநில அரசு
அதிகாரிகள், எரிசக்தி ஆணையம், மலேசிய உற்பத்தியாளர்கள்
சம்மேளனம், கேஸ் மலேசியா பெர்ஹாட் மற்றும் பாதிக்கப்பட்டத்
தரப்பினரை உள்ளடக்கிய கூட்டத்திற்கு தாம் தலைமையேற்றதாக அவர்
குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு தொழில் துறையினர் மற்றும்
மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனப் பிரதிநிதிகளுடன் தாங்கள்
அணுக்கமாக செயல்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


