கோலாலம்பூர், ஏப்ரல் 16 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பற்றிய அவதூறான கருத்துக்களை கொண்ட வீடியோவை டிக்டோக்கில் பதிவேற்றியதாகக் கூறப்படும் 25 வயது இளைஞர் ஒருவரை கிளந்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
“மத்பாகிஸ்தான்” என்ற பயனர்பெயரில் செயல்படும் நபர் பிரதமரை அவமதிக்கும் மற்றும் அவதூறான கருத்துக்களை கொண்ட வீடியோவை பதிவேற்றியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் பெற்ற புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
“இந்த வீடியோவில், கடந்த சனிக்கிழமை பிரதமர் பந்தாய் இராமாவில் நடந்த மடாணி ஹரி ராயா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மக்களை 'ஏமாற்ற' பச்சோக்கிற்கு வந்ததாகவும் அந்நபர் குற்றம் சாட்டினார்,” என்று முகமது இஸ்மாயில் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த நபரின் கைப்பேசியை பறிமுதல் செய்தனர். இது தற்போது தண்டனைச் சட்டப் பிரிவு 504, தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் சிறு குற்றங்கள் சட்டம் 1955 இன் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணைகளின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்படுகிறது.
“மேலும் நடவடிக்கை எடுக்க மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தின் (MCMC) முழு அறிக்கைக்காக நாங்கள் தற்போது காத்திருக்கிறோம்,” என்று முகமது இஸ்மாயில் மேலும் கூறினார்.
சந்தேக நபரின் தொலைபேசியில் நடத்தப்பட்ட சோதனையில் ஆபாச உள்ளடக்கம் கண்டறியப்பட்டதாகவும், இது கூடுதல் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அந்த நபருக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 292 இன் கீழ் RM4,000 அபராதம் விதிக்கப்பட்டது.


