கோலாலம்பூர், ஏப். 16 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு
எரிவாயு விநியோகத்தை கூடுமானவரை எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதிக்குள்
நிலை நிறுத்துவதற்கு பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் நிறுவனம்
நம்பிக்கை கொண்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் முடிவு, ஒழுங்கு
முறை அமைப்புகளின் ஒப்புதல், சம்பவ இடத்தின் உண்மையான
முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விநியோகம் அமையும்
என அந்நிறுவனம் கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழாய் வழி எரிவாயு விநியோகத்தை
தொடர்வதற்காக அதிகாரிகள், எரிவாயு ஏற்றுமதியாளர்கள் மற்றும்
விநியோகிப்பாளர்களுடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாக நேற்று
மலேசிய பங்குச் சந்தை ஆணையத்திற்கு வழங்கிய குறிப்பில் அது
குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக நாட்டின் தென் பகுதியிலிருந்து குறிப்பாக, டிரான்ஸ்
தாய்லாந்து-மலேசியா எரிவாயு குழாய் முறையிலிருந்து கூடுதல்
விநியோகம் பெறப்பட்டதன் மூலம் மாநிலத்தின் தென் பகுதிகளான
பெஸ்தாரி ஜெயா, மேரு மற்றும் காப்பார் ஆகிய பகுதிகளில் எரிவாயு
விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும்
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தங்களுக்கு உள்ள
கடப்பாட்டை அந்நிறுவனம் மறுவுறுதிப்படுத்தியது.
சீரான எரிவாயு விநியோகத்தை தொடர்ந்து உறுதி செய்யும்
அதேவேளையில் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில்
தாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும் அது
குறிப்பிட்டது.
எரிவாயு குழாய் முறையில் பழுதுபார்ப்பு மற்றும் மறுசரிபார்ப்பு பணிகளை
மேற்கொள்வதற்கு ஏதுவாக இச்சம்பவம் தொடர்பில் விசாரணை
மேற்கொண்டு வரும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை,
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அரச மலேசியப் போலீஸ் படை
உள்ளிட்ட தரப்பினருடன் தாங்கள் ஒத்துழைப்பை நல்கி வருவதாகவும்
அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


