ஜோர்ஜ் டவுன், ஏப் 16 - நேற்றிவு தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு
பெய்த கனமழையின் காரணமாகப் பினாங்கின் பல பகுதிகளில் இன்று
அதிகாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்தில் ஜோர்ஜ் டவுனில் உள்ள ஜாலான் பி.ரம்லி,
ஜாலான் கம்போங் மஸ்ஜிட், ஜாலான் தியோன் தெக் மற்றும் கிரீன்
கார்டன் ஆகிய பகுதிகளும் செபராங் பிறையில் தாமான் சியாக்காப்
குடியிருப்பும் பாதிக்கப்பட்டன.
எனினும், தற்போது வரை பாதிக்கப்பட்ட யாரும் தற்காலிக வெள்ள
நிவரண மையங்களில் அடைக்கலம் நாடவில்லை.
நேற்றிரவு 11.00 மணி தொடங்கி கனமழை பெய்ததைத் தொடர்ந்து பல
பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது தொடர்பில் விடியற்காலை 1.40
மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக தீமோர் லாவுட் மாவட்ட
மலேசியப் பொது தற்காப்பு படையின் பேச்சாளர் கூறினார்.
இந்த திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் பாதிக்கப்பட்டதும் சில முக்கிய
சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளதும்
தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மழை குறுகியக் காலத்திற்கு பெய்தாலும் அது அடைமழையாக இருந்த
காரணத்தால் வெள்ளம் வெகு விரைவில் வீடுகளில் நுழைந்து விட்டது.
நாங்கள் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் உள்ள
பொருள்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கும் வாகனங்களை
அப்புறப்படுத்துவதற்கும் உதவினோம் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் வெள்ளம் வடியத் தொடங்கியதாகக்
கூறிய அவர், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
என்றார்.


