பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16 : முன்னாள் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் மரணம் தொடர்பான புதிய விசாரணையில் அவரின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷுஹைலி ஜெய்ன் தெரிவித்தார்.
தியோவின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அது தற்போது இறுதி கட்டத்தில் காவல்துறையிடம் இருப்பதாகவும், விசாரணை அறிக்கை விரைவில் துணை அரசு வழக்கறிஞரிடம் (டிபிபி) சமர்ப்பிக்கப்படும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் ஷுஹைலி கூறினார்.
இருப்பினும், விசாரணையில் உதவ தியோவின் குடும்ப உறுப்பினர்களை அணுகுவதில் காவல்துறை சிரமப்படுவதாக அவர் சொன்னார்.
ஜூலை 2009 இல், சிலாங்கூர் நிர்வாக கவுன்சிலர் ஈன் யோங் ஹியான் வாவின் அரசியல் உதவியாளராக இருந்த தியோ, ஷா ஆலமில் உள்ள பிளாசா மசாலமின் ஐந்தாவது மாடியில் இறந்து கிடந்தார். சிலாங்கூர் தலைமையகத்தின் 14வது மாடியில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்குச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த வழக்கிற்கு 2011ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் தியோவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்து. சட்டவிரோத செயல்களால் ஏற்பட்ட பல உள் காயங்கள் மற்றும் அடையாளங்கள் அவர் உடலில் காணப்பட்டது மரணத்திற்கான மர்மாக விளங்குவதாக தீர்ப்பளித்தது.
கடந்த நவம்பரில், தியோவின் மரணத்தின் அனைத்து அம்சங்களையும் மீண்டும் திறந்து முழுமையாக மறு விசாரணை செய்யுமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தியோ 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால், வழக்கை விசாரிக்க காவல்துறையிடம் குறைந்த வளங்கள் இருப்பதாகக் கூறிய ஷுஹைலி, பல சாட்சிகளை மீண்டும் நேர்காணல் செய்ய முடியாமல் போனதாகக் குறிப்பிட்டார்.


