கோலாலம்பூர், ஏப்ரல் 16 - தலைநகர் புக்கிட் பிந்தாங் மற்றும் டாங் வாங்கி வட்டாரத்திலுள்ள ஐந்து இடங்களில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசக் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் மொத்தம் 30 வெளிநாட்டினரும் மூன்று உள்நாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 4.05 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில் இரு சில்லறை விற்பனை நிலையங்கள், இரு உணவகங்கள் மற்றும் ஒரு முடிதிருத்தும் நிலையம் இலக்காகக் கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 62 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களில் 33 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 27 வங்காளதேச ஆடவர்கள், இரு இந்திய ஆடவர்கள், ஒரு இந்தோனேசிய பெண் மற்றும் முதலாளிகளான மூன்று உள்நாட்டினரும் அடங்குவர் என்று அந்த அறிக்கை கூறியது.
சம்பந்தப்பட்ட மூன்று முதலாளிகளில் ஒருவர் ஒரு சில்லறை விற்பனைக் கடையில் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் ஒரு பெண்ணும் மற்றொரு ஆடவரும் இரண்டு தனித்தனி உணவக வளாகங்களில் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 56(1)(டி) பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட முதலாளிகள் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் அதே சட்டத்தின் பிரிவு 6(1)(சி), 15(1)(சி) பிரிவு, மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறை 39(பி)யின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.
இந்த நடவடிக்கையின் போது நான்கு குடிநுழைவு படிவங்கள் 29 (சாட்சிகளுக்கு சம்மன்) வழங்கப்பட்டன.


