லஹாட் டத்து, ஏப்ரல் 16 - இங்குள்ள ஜாலான் ஜெரோகோ, 13வது மைலில் இலக்கம் இல்லாத அங்காடிக் கடையில் ஒரு அட்டைப் பெட்டியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு ஆண் குழந்தையின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த குழந்தையின் உடல் வீசப்பட்டதில் தொடர்புடைய சந்தேக நபரை தனது துறை தேடி வருவதாக லஹாட் டத்து மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் துல்பாஹ்ரின் இஸ்மாயில் தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்டபோது முழு வளர்ச்சியுடன் காணப்பட்ட அந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
அக்குழந்தையின் உடல் சவப் பரிசோதனைக்காக லஹாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தையின் பிறப்பை மறைத்து இறந்த உடலை அப்புறப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக துல்பாஹ்ரின் கூறினார்.
இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


