(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஏப். 16 - சிலாங்கூர் மாநில அரசின் கோம்பாக் மாவட்ட நிலையிலான கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை இம்மாதம் 19 ஆம் சனிக்கிழமை தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செலாயாங், டேவான் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெறும்.
இவ்வாண்டிற்கான முதல் நிகழ்வாக விளங்கும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் ரெடிகேர், கார்ஸம், செங்ஹெங், 99 ஸீபீட்மார்ட், இஸூசு, சப்வே உள்ளிட்ட நிறுவனங்கள் 4,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச் சேவை, அரசு துறைகளின் கண்காட்சி, ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை, இலவச மருத்துவ பரிசோதனை ஆகிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் ஆண்டு இறுதிவரை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் கைதிகள் உட்பட 40,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சேவை, உற்பத்தி, சந்தை, சுகாதாரம், சுற்றுலா, உபசரனை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறன் கொண்ட தரப்பினர் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் மாநில அரசின் முயற்சியாக இந்த வேலை வாய்ப்புச் சந்தை விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பொருத்தமான வேலை வாய்ப்புகளைப் பெறுவது தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இடைநிலைப் பள்ளிகளில் விழிப்புணர்வு திட்டத்தை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் திட்டம் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (திவேட்) அல்லது திறன் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் வருமானத்தை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறன் கொண்ட தரப்பினருக்கு உதவும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில அரசு இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை முன்னெடுத்தது.
கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையின் வழி சிலாங்கூர் மக்களுக்கு ஏறக்குறைய 35,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.


