கிள்ளான், ஏப். 15 - நெகிரி செம்பிலான், சிரம்பானில் பதின்ம வயது பெண்
ஒருவர் கடத்தப்பட்டதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பான
விசாரணைக்காக சிலாங்கூர் மாநில போலீசார் விசாரணை அறிக்கையைத்
திறந்துள்ளனர். அந்த சந்தேக நபர் கிள்ளான், புக்கிட் திங்கியில் நேற்று
விடியற்காலை போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில்
கொல்லப்பட்டார்.
தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம் தண்டனைச் சட்டத்தின்
307வது பிரிவின் கீழ் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு
வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன்
ஓமார் கான் கூறினார்.
போலீஸ் அதிகாரிகளை கொல்ல முயன்றது தொடர்பில் தாங்கள்
விசாரணை மேற்கொள்ளும் வேளையில் கடத்தல் தொடர்பான
விசாரணையை மேற்கொள்வது நெகிரி செம்பிலான காவல் துறையின்
அதிகாரத்திற்கு உட்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
நடைபெற்ற பதவி ஏற்பு மற்றும் பதவி ஒப்படைப்புச் சடங்கில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
கிள்ளான், ஜாலான் பாயு திங்கியில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது ஆடவன் சுட்டுக்
கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின்
(உளவு/நடவடிக்கை) துணை இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் நேற்று
கூறியிருந்தார்.
கடந்த 10ஆம் தேதி 16 வயதுடைய உள்நாட்டுப் பெண்ணைக் கடத்தி
அவரின் குடும்பத்தினரிடம் 20 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரிய சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு தொடர்புள்ளதாக அவர் கூறியிருந்தார்.


