கோலாலம்பூர், ஏப்ரல் 15 - சுபாங் ஜெயா, கோத்தா வாரிசனில் உள்ள பங்சாபுரி ஸ்ரீ சூரியாவில் தற்காலிக வீடுகளுக்கு விண்ணப்பம் செய்த புத்ரா ஹைட்ஸ், எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நாளை புதன்கிழமை முதல் வீடுகளுக்கான சாவியைப் பெற்றுக்கொண்டு வாடகை வீடுகளுக்குச் செல்லலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தால் (எல்.பி.எச்.எஸ்.) 100 ரூமா சிலாங்கூர்கூ வீடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் கலாச்சாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.
உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட அலுவலகத்துடன் மாநில அரசு இணைந்து விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் என்று அவர் சொன்னார்.
அனைத்தும் சரியாக இருந்தால் புதன்கிழமை சாவி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வீடுகளுக்குச் செல்லலாம்.
மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகளுடன் 1,000 சதுர அடி பரப்பளவில் 100 எல்.பி.எச்.எஸ். வீடுகளை வழங்குகிறது. உள்கூரை மின்விசிறி மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்ட புத்தம் புதிய வீடுகள் உள்ளன என்று அவர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் நடந்த ஒரு விளக்கக் கூட்டத்தில் கூறினார்.
மாதந்தோறும் வாடகை 850 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இது சந்தை விகிதமான 1,800 வெள்ளியை விட கணிசமான அளவு குறைவாக இருப்பதோடு வைப்புத் தொகையும் வழங்க வேண்டியதில்லை என்றும் போர்ஹான் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் சக்தியைப் பொறுத்து வாடகைப் பணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும்.
ஆரம்ப ஆறு மாதங்களுக்குப் பிறகும் நிரந்தர வீடு கிடைக்காதவர்களுக்கு தொடர்ந்து வாடகை வீடுகள் வழங்குவது பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.


